Tuesday, March 29, 2011

வசைகளின் சில்லரை சப்தங்கள்.....


பெரும்பாலான,
பிரதான சாலைகளில்,
நெடுக காணமுடிகிறது,
அழுக்கை ஆடையாய் அணிந்து,
யாசிப்பவர்களை....

வயிற்று பசியினால்,
கையில் ஏந்துகிற,
தட்டை விட,
உடல் பசியின் கூடலால்,
அவள் தோளில் சுமக்கிற குழந்தை,
யாசித்தலை,
அடுத்த தலைமுறைக்கு,
அழைத்து செல்கிற,
பிரதிநிதியென்பதில் ,  
கலவரப்படுகிறது,
என் ஆழ்மனது..

விளைவாக, 
தவிர்க்கிறேன் ஈதலை ....

இச்செய்கையில்,
கொதிக்கிற அவள்,
என் செவி தட்டுகளில் இடுகிற,
வசைகளின் சில்லரை சப்தங்கள்,
பெரும் அதிர்வுகளோடு,
ஒலித்தபடியிருக்கின்றன....

Monday, April 19, 2010

திரவியங்களில் சிதைவுறும்..... வாழ்க்கை படிமங்கள்..

தகாத வார்த்தையேனும்,
தாய் மொழியில்,
எதிர்ப்பட்டு உரைப்போனை,
எதிர்ப்பார்த்து உலவுகையில்,
நிசப்தத்தின் பெரும் ஒலி,
நிரப்பியிருந்ததில்,
அதிர்ச்சி ஏதுமில்லை......

வெம்மையின் கிரணங்கள்,
வலியின் குவியலை,
வேட்டையாடுகையில்,
வெளிப்படுகிற வியர்வையும்,
கானலென காய்வதிலே,
கவனம் கொண்டிருந்தது......

வழியில் இடறுகிற கல்லில்,
அனிச்சையாய் எழுகிற,
அம்மா எனும் முனகல்,
வீரியம் குறைந்தவனின்,
புணர்ச்சியாய்,
ஒலித்துக்கொண்டிருந்தது,
வெற்றிடத்தின் காற்றலைகளில்.....

Sunday, February 21, 2010

ஒரு சமூகம்...... என்னை கடந்திருந்தது.......


இலையுதிர்காலத்தில்,
மான் கொம்பாய்,
காட்சியளித்த விருட்சத்தின்,
கீழ் நின்று,
சருகை சேகரித்து,
பசை கொண்டு,
கிளை அமர்த்தலானேன்,
அவசியம் ஏதுமற்று....

அவ்வழி சென்ற ஒருவன்,
சிரித்துக்கொண்டே,
தலையடித்துச்சென்றான்...
சலனப்படாமல்,
தொடர்ந்திருந்தேன்....

மற்றொருவன்,
பைத்தியம் என்றபடி,
பயணமானான்,
முனைப்புடன்,
பாதிமுடித்திருந்தேன்...

பிறகொருவன் கண்டு,
சினிமாவிற்கான,
செயற்கை அமைப்பென,
யூகித்து நகர்ந்தான்,
முழுவதும் முடித்திருந்தேன்....

இப்போது வந்தவன்,
அறிவியல் ஆய்வெனவும்,
கடைசியாய் ஒருவன்,
கலையுணர்வென,
கண்சிமிட்டியதுடனும்,
முழுதாய் ஒரு சமூகம்,
என்னை கடந்திருந்தது........


இக்கவிதை திண்ணை  இணையத்தளத்தில் பதிவேற்றமாகியுள்ளது....
நன்றி திண்ணை...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310022010&format=html

Tuesday, February 16, 2010

கண்ணீரின் ஒற்றைத்துளி...


திரவியம் தேடி,
அரேபியாவில்,
தனிமை பூண்டிருந்த என்னை,
தந்தையின்,
உடல் நலம்குறித்து,
தகவல் தந்துவிட்டு,
விரைந்து வரச்சொன்னான்,
உடன் பிறந்தவன்....

ஆடையிநூடே,
சந்தேகத்தையும்,
உடுத்தி கொண்டு,
பயணப்படுகையில்,
படப்படக்கிறது,
சிந்தனை ....

அதன் அதிர்வலைகள்,
மரணம் பற்றி,
ஏனோ கேள்வியெழுப்பபி,
அது துக்கம் அனுசரிக்கிற,
சடங்கு அல்ல என்கிற,
கருத்துக்குள் தள்ளி,
பக்குவத்தின் ஒப்புதலுடன்,
பதிவு செய்கிறது,
என் ஆழ்மனதில்.....

இல்லம் நெருங்குகையில்,
போர்த்தியிருந்த கூட்டம்,
சங்கு ஒலி,
தென்னை ஓலையின் பின்னல்,
ஒப்பாரி,
புரிந்துகொள்வதற்கு,
போதுமானதாய் இருந்தது.....

இதயத்துடிப்பு,
சுவாசம்,
சிந்தனை,
இயக்கமென,
வாழ்தலுக்கான காரணிகளை,
தந்தையிடமிருந்து,
கையகப்படுத்தி,
கிடத்தியிருந்தது,
மரணம்....

என்னை கண்ட கணம்,
நெஞ்சறைந்து கொண்ட..
தாய் கிழவியும்,
குழுமியிருந்த கூட்டமும்,
எதிர்ப்பார்த்திருந்தனர்,
பெரும் அழுகையை,
என்னிடமிருந்து....

அழவிடாமல்,
அழுத்தி வைத்திருந்த,
பக்குவத்தை,
குற்ற உணர்வு,
குதறிக்கடித்த கணம்,
கண்ணீர் சுரப்பிகள்,
சிந்த தயாராயிருந்த,
ஒற்றைத்துளியை,
வரையறுப்பதற்கு,
வார்த்தை வசப்படவில்லை....

இக்கவிதை கீற்று இணையதளத்தில் பதிவேற்றம் ஆகியுள்ளது....

நன்றி கீற்று...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3610:2010-02-16-08-21-39&catid=2:poems&Itemid=88

Wednesday, February 10, 2010

வேகத்தடை...


நெடுநேரமாய்
சூரியனின் கிரணங்கள்
சறுக்கி விளையாடிய
நிழற்குடை ஒன்று
அந்தியில் வாசம் செய்கிற
கல்லூரிப் பெண்களினால்
தணிந்திருந்தது....

நிறைந்திருந்த அப்பெண்களின்
கேளிக்கையும்
சிரிப்பொலியும்
கொட்டிய அதிர்வலைகளில்
திடீரென முளைத்திருக்கக்கூடும்
தார்ச்சாலையின் மீதொரு
வேகத்தடை...

இக்கவிதை கீற்று இணையதளத்தில் பதிவேற்றம் ஆகியுள்ளது....
நன்றி கீற்று...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3396:2010-02-11-05-01-12&catid=2:poems&Itemid=88

Sunday, February 7, 2010

ஆயுதத்தின் கூர்முனை....
ஒவ்வொரு முறையும்,
உன்னிடம் வாதிட்டு,
தோற்றதின் படிமங்கள்,
ஆயத்தப்படுத்துகின்றன,
அடுத்தமுறை உன்னை வீழ்த்த...

இம்முறை வார்த்தையையும்,
வாதத்திற்கான காரணியையும்,
ஒன்று சேர்த்து கூர்தீட்டி,
ஆயுதமாய் திரித்து,
மறைத்தவாறு,
தோன்றுகிறேன் உன் முன்னே...

துவங்குகிறது வாதம்,
நீண்ட அவ்வார்த்தை யுத்தத்தில்,
ஆயுத பிரயோகத்திற்கான,
என் முறையில்,
சிரித்து வைகிறாய்,
சாதுர்யமாக...
மழுங்கி இருக்ககூடும்,
ஆயுதத்தின் கூர்முனை....

இக்கவிதை திண்ணை  இணையத்தளத்தில் பதிவேற்றமாகியுள்ளது....
நன்றி திண்ணை...
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31002065&format=html

Monday, February 1, 2010

காதலின் சுவடு

தானே சிரித்து,
தலை சொருகி,
பொதுவிடம் உணர்ந்து,
வெட்கம் உதிர்க்கிற பெண்,
விட்டுச்செல்கிற,
கால் தடத்தில்,
பதிந்திருக்க கூடும்,
காதலின் சுவடு...

இக்கவிதை கீற்று இணையத்தளத்தில் பதிவேற்றமாகியுள்ளது....
நன்றி கீற்று...
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2989:2010-02-01-05-49-11&catid=2:poems&Itemid=88

Saturday, January 9, 2010

நவீனம்... ஒரு வித பிரதிபலிப்பு....உழைத்து முடித்துவிட்டு,

கூலிக்காய்,

வரிசை பேணுகிறான்,

பாட்டாளி...

நவீனமாய்,

காட்சிப்படுத்துகிறது நகரம்,

ஏ.டி.எம் முன்...

Thursday, January 7, 2010

காதல் இடைவெளிகளில் அமருவதில்லை...காதல் உறுதிசெய்யப்பட்டு,
கண்பேசுவதாய்,
கூடிய சந்திப்புகளில்,
அமர்ந்திருக்கிறோம்,
காற்றுக்கும் இடைவெளி மறுத்தபடி..

இருப்பினும்,
இல்லாத அவ்விடைவெளிக்குள்,
அனுமதி வாங்காமலேயே,
அமர்ந்தாற்றுகிறது காதல்...

பின்னாளில்,
கருத்து வேறுபாட்டின்,

கனத்த  வேர்களுக்கு,
பால் ஊற்றியபடி,
பயணப்படுகிறது,
பக்குவமடையாத காதலும்,
பக்குவமடைந்த தலைக்கனமும்....

பேசி தீர்ப்பதென,
முடிவு செய்யப்பட்டு,
கூடிய சந்திப்புகளில்,
மௌனம் உடுத்தி,
இடைவெளி விட்டு,
அமர்ந்திருக்கிறோம்,
காதலுக்காக....

Thursday, December 24, 2009

கடவுளும் நாத்திகரென....


கற்பித்தல் கல்வியென,
போதிக்கிற கூடத்தில்,
கற்பழித்தல் கலவியென,
வரையறுத்தவனும்,
வன்மையாய் கண்டிக்கிறான்....

உன்னை பிரிந்தால்,
உயிர் போகுமென,
கருப்பையில்,
உயிர் விதைத்து விட்டு,
காதல் கலைத்தவனும்,
கண்கள் சிவக்கின்றான்...

நீலப்படத்தின்,
தரம் சரியில்லையென,
தயாரித்தவனின்,
தாயார் முதற்கொண்டு,
தகாத வார்த்தை சொன்னவனும்,
நெருப்பாய்  தகிக்கின்றான்...

பாசியாய்,
தேங்கிய காமத்தினை,
தாசியிடம்,
விலை பேசுகிற  காமுகனும்,
காரி உமிழ்கிறான்...

நடுப்பக்கத்தில்,
காமம் மடித்து விற்கும்,
நாளிதழ்களும்,
நாகரீகம் நழுவியதாய்,
நையாண்டி பேசுகிறது...

பிறர் மனை போதையில்,
பிணம் தின்று திரிந்தவனும்,
ஒழுக்கம் போனதாய்,
ஒப்பாரி வைக்கின்றான்...

இப்படியாய்,
கோயில் பிரகாரத்தில்,
கூடி களித்தவன்,
குற்றவாளியென,
கூட்டம் சேர்ந்து,
அர்ச்சகரை அர்ச்சிக்க..,

சிலை வடிவ சாமிக்கு,
இச்சிந்தனை பொருந்துமாவென,
கடவுளே எழுந்தருளி,
கேள்வி எழுப்பினால்,
அவரும் நாத்திகரென ...
அறிவித்திடுவர் மேன்மக்கள்...

குறிப்பு :  உரையாடல்  கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது...

Wednesday, November 11, 2009

பெரியோரை வியத்தலும் இலமே...


வெற்றிடம் என,
விஞ்ஞானம்,
வகுத்த நிலவில்,
பாட்டியின் வடையோடு,
அறியாமை சுட்டு  கொடுத்தீர் ...


வயதில் பெரியோரை,
இகழ்ந்து பேசியபோது,
இளித்து கொண்டிருந்தீர்...


பக்கத்துக்கு வீட்டின்,
பேர் இரைச்சலை,
எதிர் வீட்டுடன்,
கூடி பேசி,
குதூகளித்தீர்...


புரிதலின்மையின்,
உச்சத்தில்,
அம்மாவின் கன்னங்களில்,
ஐந்து விரல் பதித்து, 
ஆணாதிக்கம் போதித்தீர்....


மன்னிப்பு பற்றி  வகுப்பெடுப்பீர்,
தவறிழைத்தால்,
மதிய வெயில் தின்ன,
கால் மூட்டின்  சதை கொடுப்பீர்...

வார்த்தைகளில்,
இத்தலைமுறை,
குறைபாடுடன்,
பிரசவித்திருப்பதாய,
பிதற்றி கொள்கிறீர்கள்...

பிழை பிம்பம் கொண்டிருப்பினும்,
பிரதிபலித்த,
கண்ணாடிக்கு கண்டனம்,
சர்வாதிகாரத்தின்,
ஒருவித சாயல்... 

Monday, September 14, 2009

அசரிரீ...


அணிந்திருந்த ஆடைகள்,
பாலின வேறுபாட்டை...
உடைத்திருந்தது...                                                    

வசித்திருக்கும் வீடு,
வாசித்தது,
இவர்களின் வசதியை...

தாழ்வாரத்தில்,
தரை இறக்கப்பட்டிருந்த,
மது பாட்டில்களும்...

நெருப்பு தின்று,
துப்பியிருந்த,
புகையிலை சாம்பல்களும்..

சுவரே நாணுகிற,
சுவரொட்டிகளும்...

வர்ணித்தது,
வாழ்கையை முறையை...

சிவப்பு விளக்கு பகுதியோ???
சிந்தையில் உதித்த,
சந்தேகத்தின் தலையை,
நண்பனின் இருப்பு,
நசுக்கி எறிந்தது...

அரை நிர்வாணத்துடன்,
அறையை விட்டு,
வெளி வருகிற,
நண்பனின் வியர்வையில்,
இன்னும் காய்ந்திருக்கவில்லை,
காமம்....

விரைவாய்,
விடைகொடுத்து விட்டு,
விரைகிறான் அவ்வறைக்குள்...

உதித்த ஒரு கேள்வியை,
புதைத்துக்கொண்டு,
கிளம்பிவிட்டேன்...

பின்னொரு நாளில்,
திருமண அழைப்பிதழுடன்,
தோன்றிய அவனை,
அது குறித்து கேட்க...

குற்ற உணர்வற்று,
கூறுகிறான்,
அன்றே ஆணுரைக்கும்,
அவளுக்கும்,
நன்றி சொல்லிவிட்டதாக...

பெரும்பாலான,
ஆணுறைகளில்,
விந்தணுவோடு,
கற்பும்,
உறைந்து கிடப்பதாய்,
காதுக்குள் அலறிக்கொண்டிருந்தது,
அசரிரீ ஒன்று...

Monday, August 24, 2009

உன் எச்சில் வார்த்தைகளுடன்...


சாட்சி வைத்த,
அக்னி,
சுட்டெரிக்கும் என்றோ,

புடை சூழ்ந்த,
உறவுகள்,
புரளி பேசும் என்றோ...

கரன்சி,
உன் கையிருப்பு,
அதிகம் என்றோ...

தனிமை,
தின்ன விழையும் என்றோ...

விந்தணுக்கள்,
நிராகரிக்கப்படும் என்றோ...

மேட்டுக்குடி வாழ்வில்,
மோகம்கொண்டோ...
தொடர்ந்திருக்கவில்லை,
இவ்விவாகத்தை...

உன் கருப்பை நுழைந்த,
என் விந்தொன்று,
உருப்பெற்றதர்க்காய்...
வாழ்ந்திருக்கிறேன்,
உன் எச்சில் வார்த்தைகளுடன்...

Tuesday, August 4, 2009

தோல்வியை துப்பியவாறு...


பன்பலையின்னூடே,
கசிந்து கரைகிற பாடலில்,
லயித்து சிலிர்த்து - பின்
கிடக்கிறேன் பிரேதமென...

இழைந்தோடுகிற,
இசையின் கருப்பொருள்,
அடர்த்தியாய்,
உன் நினைவுகளை,
அவிழ்த்துவிட்டிருந்தது....

முழுவதுமாய்,
கட்டுக்குலைந்து,
உன் தளத்தில்,
சரிந்த என் நினைவை,
மீட்டெடுக்க திராணியற்று,
தொடர்ந்து ஒலிக்கிறது,
தோல்வியை துப்பியவாறு..

Friday, July 31, 2009

சிவப்பு விளக்கு...


ஏறக்குறைய,
முதுகில் ஏறியவாறு,
அமர்ந்துகொண்டும்...

இறுக அணைத்தபடியும்..

முத்தமிட்டபடியும்...

பயணிக்கிற,
இளம்ஜோடிகளின்,
இருசக்கரவாகனத்தை...

வழிமறித்து,
ஒளிர ஆரமித்திருந்தது,
சிக்னலின்,
"சிவப்பு விளக்கு"...

Tuesday, July 21, 2009

சவர்க்காரம்....


தினந்தோறும்,
நுண்ணுயிரிகளை,
கொன்று குவிக்கும்,
குற்ற உணர்வுடன்,
இளைத்துக்கொண்டிருந்தது,
சவர்க்காரம்....இலங்கை அதிபரை,
நினைத்து கொள்ளும்படி,
ஆறுதல் சொன்னேன்.....

Thursday, July 9, 2009

விரிசல்-2


இரவின் இருள்,
சப்தங்களுக்கு திரையிட்டுவிட்டு,
ஆத்மார்த்தமான,
அமைதிக்கு,
ஆயத்தமாயிருந்தது...


யாதுமற்ற தனிமையில்,
இருள் சூழ்ந்திருப்பின்,
உறக்கம் ஊடுருவும்,
என்றவாறான,
நம்பிக்கை நலிந்த பின்னிரவில்,
உயிர்வதை செய்யும்,
நம் பிரிவின் வலியை,
இயற்கையோடு இறக்கிட,
பயணித்தேன்...


மஞ்சள் நிறத்தை,
கக்கிக்கொண்டிருந்த,
சோடியம் விளக்கொளியில்,
பச்சயம் தவிர்த்து,
பழுப்பு பூசியிருந்தன,
ஆலமரத்தின் தளிர்களும்...


இடைவெளி விட்டு,
விரைகின்ற வாகனங்களில்,
ஆகாயம் பறக்க,
ஆசைப்பட்டு,
தோல்வியை தழுவுகின்றன...
தார் சாலையின் மீதான,
மண்துகள்கள்...


பூட்டின் மீதான,
நம்பிக்கையின்மையோ,
இறைவனின் மீதான,
நம்பிக்கையோ,
மறித்து கொண்டிருந்தது,
கடைக்கு முன்னால்,
ஒரு கற்பூரம்...


விழி மறுதலித்த,
உறக்கத்தை,
மதுவிற்கு மனு செய்து,
வரவழைத்த,
குடிமகன்கள்,
புகார்களை,
பூமியின் செவியில்,
செப்பிக்கொண்டிருந்தனர்...


இந்நிகழ்வுகள்,
காட்சி பிழையன்று,
எனினும்,
பிழையையே எய்துகின்றன,
இக்காட்சிகள்...


உன்னோடான பிரிவில்,
ஏகாந்தம் பொழியும் இரவும்,
ஐம்பூதங்களால் அழுவதாய்,
அர்த்தபடுத்திக்கொள்கிறது,
ஆத்மா..


இரவை வீழ்த்தும் பொருட்டு,
கதிர் வாள் கொண்டு,
கிழக்கெழும் சூரியனும்,
என் அக இருளை,
அகற்ற முடியாமல்,
அறிவிப்பின்றி நகருகிறது,
மேற்கு நோக்கி...

Wednesday, July 1, 2009

எம்.எல்.ஏ வீடு..

சூரிய ஒளி உட்புகுந்து,
தூண் அமைக்கும் குடிசை...

காலை உணவு,
இரவே ஊறிக்கொண்டிருக்கும் நீரில்...


கட்டியிருக்கும் ஆடைக்கு மாற்று,
நிர்வாணம் தான்..


வரப்புகளை விட சற்று அகலமான,
மழைக்காலத்தில் மட்டுமே,
சமதளமான தார்சாலைகள்...


துணைக்கு வரும் நிலா வெளிச்சத்தில்,
நன்கு தெரியும் கல்லடிபட்ட,
தெருவிளக்கு....


இத்தனைக்கும் இடையே,
வெளிச்ச வெள்ளத்தில்,
நகரத்து நலன்களில்,
நலமாய் நிற்கிறது,
எங்கள் எம்.எல்.ஏ வீடு....

விரிசல்...

முதன் முறையாய்,
உனக்கும் எனக்குமான,
உணர்ச்சிகள்,
முட்டி மோதிக்கொண்டதில்,
உடைந்து சிதறுகின்றன,
ஒத்த அலைநீளங்களிலான,
நம் சிந்தனைகள்...


இரையை கொத்த,
எத்தனித்து,
அலகுடைதுக்கொண்ட,
பறவையாய்,
அலறுகிறது மனம்...


நம் அகநானூற்று,
புத்தகத்தில்,
புறநானூற்று பக்கத்தை,
புதைத்தவன்,
எவனென நானறியேன்...


இருப்பினும்,
ஊடலுக்குள்ளாக,
ஒளிந்திருக்கும்,
நம் காதலின் நம்பிக்கையில்,
நகருகிறது,
என் காலம்...

துரோக வில்...


தன்னினம்,
தடையின்றி தழைக்க,
விடையின்றி வாழும்,
விருட்சகங்கள்,
போராளி..

தன் மக்களின்,
உணர்வு இசைப்பதற்காய்,
இவன் கைகள்,
மீட்டிய வீணைகள்,
துப்பாக்கிகள்..

தன் மாணுடத்தின்,
உரிமை பிறப்பதர்க்காய்,
இவன் தேகம்,
வருடிய கண்ணிகள்,
வெடிகள்...

தோழமைகள்,
பகல் பார்பதற்காய்,
இருளில் இரட்சிக்கும்,
இவர்கள்,
இறந்துபடுவது,
நிச்சயம் இருக்காது,
தோட்டாக்களால்...

தன் இனம்,
தீகிற பொழுது,
மனம் நோகுவதாய்,
தினம் நடித்தவன்...

கொன்று குவித்து,
பாஸ்பரஸ் உண்ண,
களித்தவன்...

ஊழ்வினையை,
ஊதி தீர்த்தவன் என....

கர்ணனின் கதையாய்,
துளைத்திருக்ககூடும்,
துரோக வில்....

ஒரு உத்தம தாசி...


உயிர்கொல்லி நோய்,
உறுதி செய்ய பட்டபின்னும்,
சிரிக்கிறாள்,
ஒரு உத்தம தாசி...


எறிந்த பின்,
மிச்சமிருக்கும் சாம்பல்,
நெருப்பை கேலி செய்வது போல...


காமத்தின் உச்சத்தில்,
தன் மச்சம் பார்த்தவர்களை,
மிச்சமின்றி உன்ன போகும்,
நோயை நினைத்து சிரிக்கிறாள்...


ஹைடெக் மனிதர்களை,
அடையாளம் காட்ட போகும்,
ஹட்ச். ஐ.வி நினைத்து களிக்கிறாள்...


உணர்ச்சி பெருக்கில்,
தன் உணர்வு நெரித்தவர்களை,
உருக்கபோகும் உண்மை நினைத்து,
உன்னதம் அடைகிறாள்...


விஞ்ஞானம் தோற்றுபோயிருப்பது,
பண்பாட்டை வென்றெடுக்கவென ...
விசும்பி கொண்டே சிரிக்கிறாள்,
சிரிப்பொலி வான் பிளந்தது....