Thursday, December 24, 2009

கடவுளும் நாத்திகரென....


கற்பித்தல் கல்வியென,
போதிக்கிற கூடத்தில்,
கற்பழித்தல் கலவியென,
வரையறுத்தவனும்,
வன்மையாய் கண்டிக்கிறான்....

உன்னை பிரிந்தால்,
உயிர் போகுமென,
கருப்பையில்,
உயிர் விதைத்து விட்டு,
காதல் கலைத்தவனும்,
கண்கள் சிவக்கின்றான்...

நீலப்படத்தின்,
தரம் சரியில்லையென,
தயாரித்தவனின்,
தாயார் முதற்கொண்டு,
தகாத வார்த்தை சொன்னவனும்,
நெருப்பாய்  தகிக்கின்றான்...

பாசியாய்,
தேங்கிய காமத்தினை,
தாசியிடம்,
விலை பேசுகிற  காமுகனும்,
காரி உமிழ்கிறான்...

நடுப்பக்கத்தில்,
காமம் மடித்து விற்கும்,
நாளிதழ்களும்,
நாகரீகம் நழுவியதாய்,
நையாண்டி பேசுகிறது...

பிறர் மனை போதையில்,
பிணம் தின்று திரிந்தவனும்,
ஒழுக்கம் போனதாய்,
ஒப்பாரி வைக்கின்றான்...

இப்படியாய்,
கோயில் பிரகாரத்தில்,
கூடி களித்தவன்,
குற்றவாளியென,
கூட்டம் சேர்ந்து,
அர்ச்சகரை அர்ச்சிக்க..,

சிலை வடிவ சாமிக்கு,
இச்சிந்தனை பொருந்துமாவென,
கடவுளே எழுந்தருளி,
கேள்வி எழுப்பினால்,
அவரும் நாத்திகரென ...
அறிவித்திடுவர் மேன்மக்கள்...

குறிப்பு :  உரையாடல்  கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது...

Wednesday, November 11, 2009

பெரியோரை வியத்தலும் இலமே...


வெற்றிடம் என,
விஞ்ஞானம்,
வகுத்த நிலவில்,
பாட்டியின் வடையோடு,
அறியாமை சுட்டு  கொடுத்தீர் ...


வயதில் பெரியோரை,
இகழ்ந்து பேசியபோது,
இளித்து கொண்டிருந்தீர்...


பக்கத்துக்கு வீட்டின்,
பேர் இரைச்சலை,
எதிர் வீட்டுடன்,
கூடி பேசி,
குதூகளித்தீர்...


புரிதலின்மையின்,
உச்சத்தில்,
அம்மாவின் கன்னங்களில்,
ஐந்து விரல் பதித்து, 
ஆணாதிக்கம் போதித்தீர்....


மன்னிப்பு பற்றி  வகுப்பெடுப்பீர்,
தவறிழைத்தால்,
மதிய வெயில் தின்ன,
கால் மூட்டின்  சதை கொடுப்பீர்...

வார்த்தைகளில்,
இத்தலைமுறை,
குறைபாடுடன்,
பிரசவித்திருப்பதாய,
பிதற்றி கொள்கிறீர்கள்...

பிழை பிம்பம் கொண்டிருப்பினும்,
பிரதிபலித்த,
கண்ணாடிக்கு கண்டனம்,
சர்வாதிகாரத்தின்,
ஒருவித சாயல்... 

Monday, September 14, 2009

அசரிரீ...


அணிந்திருந்த ஆடைகள்,
பாலின வேறுபாட்டை...
உடைத்திருந்தது...                                                    

வசித்திருக்கும் வீடு,
வாசித்தது,
இவர்களின் வசதியை...

தாழ்வாரத்தில்,
தரை இறக்கப்பட்டிருந்த,
மது பாட்டில்களும்...

நெருப்பு தின்று,
துப்பியிருந்த,
புகையிலை சாம்பல்களும்..

சுவரே நாணுகிற,
சுவரொட்டிகளும்...

வர்ணித்தது,
வாழ்கையை முறையை...

சிவப்பு விளக்கு பகுதியோ???
சிந்தையில் உதித்த,
சந்தேகத்தின் தலையை,
நண்பனின் இருப்பு,
நசுக்கி எறிந்தது...

அரை நிர்வாணத்துடன்,
அறையை விட்டு,
வெளி வருகிற,
நண்பனின் வியர்வையில்,
இன்னும் காய்ந்திருக்கவில்லை,
காமம்....

விரைவாய்,
விடைகொடுத்து விட்டு,
விரைகிறான் அவ்வறைக்குள்...

உதித்த ஒரு கேள்வியை,
புதைத்துக்கொண்டு,
கிளம்பிவிட்டேன்...

பின்னொரு நாளில்,
திருமண அழைப்பிதழுடன்,
தோன்றிய அவனை,
அது குறித்து கேட்க...

குற்ற உணர்வற்று,
கூறுகிறான்,
அன்றே ஆணுரைக்கும்,
அவளுக்கும்,
நன்றி சொல்லிவிட்டதாக...

பெரும்பாலான,
ஆணுறைகளில்,
விந்தணுவோடு,
கற்பும்,
உறைந்து கிடப்பதாய்,
காதுக்குள் அலறிக்கொண்டிருந்தது,
அசரிரீ ஒன்று...

Monday, August 24, 2009

உன் எச்சில் வார்த்தைகளுடன்...


சாட்சி வைத்த,
அக்னி,
சுட்டெரிக்கும் என்றோ,

புடை சூழ்ந்த,
உறவுகள்,
புரளி பேசும் என்றோ...

கரன்சி,
உன் கையிருப்பு,
அதிகம் என்றோ...

தனிமை,
தின்ன விழையும் என்றோ...

விந்தணுக்கள்,
நிராகரிக்கப்படும் என்றோ...

மேட்டுக்குடி வாழ்வில்,
மோகம்கொண்டோ...
தொடர்ந்திருக்கவில்லை,
இவ்விவாகத்தை...

உன் கருப்பை நுழைந்த,
என் விந்தொன்று,
உருப்பெற்றதர்க்காய்...
வாழ்ந்திருக்கிறேன்,
உன் எச்சில் வார்த்தைகளுடன்...

Tuesday, August 4, 2009

தோல்வியை துப்பியவாறு...


பன்பலையின்னூடே,
கசிந்து கரைகிற பாடலில்,
லயித்து சிலிர்த்து - பின்
கிடக்கிறேன் பிரேதமென...

இழைந்தோடுகிற,
இசையின் கருப்பொருள்,
அடர்த்தியாய்,
உன் நினைவுகளை,
அவிழ்த்துவிட்டிருந்தது....

முழுவதுமாய்,
கட்டுக்குலைந்து,
உன் தளத்தில்,
சரிந்த என் நினைவை,
மீட்டெடுக்க திராணியற்று,
தொடர்ந்து ஒலிக்கிறது,
தோல்வியை துப்பியவாறு..

Friday, July 31, 2009

சிவப்பு விளக்கு...


ஏறக்குறைய,
முதுகில் ஏறியவாறு,
அமர்ந்துகொண்டும்...

இறுக அணைத்தபடியும்..

முத்தமிட்டபடியும்...

பயணிக்கிற,
இளம்ஜோடிகளின்,
இருசக்கரவாகனத்தை...

வழிமறித்து,
ஒளிர ஆரமித்திருந்தது,
சிக்னலின்,
"சிவப்பு விளக்கு"...

Tuesday, July 21, 2009

சவர்க்காரம்....


தினந்தோறும்,
நுண்ணுயிரிகளை,
கொன்று குவிக்கும்,
குற்ற உணர்வுடன்,
இளைத்துக்கொண்டிருந்தது,
சவர்க்காரம்....இலங்கை அதிபரை,
நினைத்து கொள்ளும்படி,
ஆறுதல் சொன்னேன்.....

Thursday, July 9, 2009

விரிசல்-2


இரவின் இருள்,
சப்தங்களுக்கு திரையிட்டுவிட்டு,
ஆத்மார்த்தமான,
அமைதிக்கு,
ஆயத்தமாயிருந்தது...


யாதுமற்ற தனிமையில்,
இருள் சூழ்ந்திருப்பின்,
உறக்கம் ஊடுருவும்,
என்றவாறான,
நம்பிக்கை நலிந்த பின்னிரவில்,
உயிர்வதை செய்யும்,
நம் பிரிவின் வலியை,
இயற்கையோடு இறக்கிட,
பயணித்தேன்...


மஞ்சள் நிறத்தை,
கக்கிக்கொண்டிருந்த,
சோடியம் விளக்கொளியில்,
பச்சயம் தவிர்த்து,
பழுப்பு பூசியிருந்தன,
ஆலமரத்தின் தளிர்களும்...


இடைவெளி விட்டு,
விரைகின்ற வாகனங்களில்,
ஆகாயம் பறக்க,
ஆசைப்பட்டு,
தோல்வியை தழுவுகின்றன...
தார் சாலையின் மீதான,
மண்துகள்கள்...


பூட்டின் மீதான,
நம்பிக்கையின்மையோ,
இறைவனின் மீதான,
நம்பிக்கையோ,
மறித்து கொண்டிருந்தது,
கடைக்கு முன்னால்,
ஒரு கற்பூரம்...


விழி மறுதலித்த,
உறக்கத்தை,
மதுவிற்கு மனு செய்து,
வரவழைத்த,
குடிமகன்கள்,
புகார்களை,
பூமியின் செவியில்,
செப்பிக்கொண்டிருந்தனர்...


இந்நிகழ்வுகள்,
காட்சி பிழையன்று,
எனினும்,
பிழையையே எய்துகின்றன,
இக்காட்சிகள்...


உன்னோடான பிரிவில்,
ஏகாந்தம் பொழியும் இரவும்,
ஐம்பூதங்களால் அழுவதாய்,
அர்த்தபடுத்திக்கொள்கிறது,
ஆத்மா..


இரவை வீழ்த்தும் பொருட்டு,
கதிர் வாள் கொண்டு,
கிழக்கெழும் சூரியனும்,
என் அக இருளை,
அகற்ற முடியாமல்,
அறிவிப்பின்றி நகருகிறது,
மேற்கு நோக்கி...

Wednesday, July 1, 2009

எம்.எல்.ஏ வீடு..

சூரிய ஒளி உட்புகுந்து,
தூண் அமைக்கும் குடிசை...

காலை உணவு,
இரவே ஊறிக்கொண்டிருக்கும் நீரில்...


கட்டியிருக்கும் ஆடைக்கு மாற்று,
நிர்வாணம் தான்..


வரப்புகளை விட சற்று அகலமான,
மழைக்காலத்தில் மட்டுமே,
சமதளமான தார்சாலைகள்...


துணைக்கு வரும் நிலா வெளிச்சத்தில்,
நன்கு தெரியும் கல்லடிபட்ட,
தெருவிளக்கு....


இத்தனைக்கும் இடையே,
வெளிச்ச வெள்ளத்தில்,
நகரத்து நலன்களில்,
நலமாய் நிற்கிறது,
எங்கள் எம்.எல்.ஏ வீடு....

விரிசல்...

முதன் முறையாய்,
உனக்கும் எனக்குமான,
உணர்ச்சிகள்,
முட்டி மோதிக்கொண்டதில்,
உடைந்து சிதறுகின்றன,
ஒத்த அலைநீளங்களிலான,
நம் சிந்தனைகள்...


இரையை கொத்த,
எத்தனித்து,
அலகுடைதுக்கொண்ட,
பறவையாய்,
அலறுகிறது மனம்...


நம் அகநானூற்று,
புத்தகத்தில்,
புறநானூற்று பக்கத்தை,
புதைத்தவன்,
எவனென நானறியேன்...


இருப்பினும்,
ஊடலுக்குள்ளாக,
ஒளிந்திருக்கும்,
நம் காதலின் நம்பிக்கையில்,
நகருகிறது,
என் காலம்...

துரோக வில்...


தன்னினம்,
தடையின்றி தழைக்க,
விடையின்றி வாழும்,
விருட்சகங்கள்,
போராளி..

தன் மக்களின்,
உணர்வு இசைப்பதற்காய்,
இவன் கைகள்,
மீட்டிய வீணைகள்,
துப்பாக்கிகள்..

தன் மாணுடத்தின்,
உரிமை பிறப்பதர்க்காய்,
இவன் தேகம்,
வருடிய கண்ணிகள்,
வெடிகள்...

தோழமைகள்,
பகல் பார்பதற்காய்,
இருளில் இரட்சிக்கும்,
இவர்கள்,
இறந்துபடுவது,
நிச்சயம் இருக்காது,
தோட்டாக்களால்...

தன் இனம்,
தீகிற பொழுது,
மனம் நோகுவதாய்,
தினம் நடித்தவன்...

கொன்று குவித்து,
பாஸ்பரஸ் உண்ண,
களித்தவன்...

ஊழ்வினையை,
ஊதி தீர்த்தவன் என....

கர்ணனின் கதையாய்,
துளைத்திருக்ககூடும்,
துரோக வில்....

ஒரு உத்தம தாசி...


உயிர்கொல்லி நோய்,
உறுதி செய்ய பட்டபின்னும்,
சிரிக்கிறாள்,
ஒரு உத்தம தாசி...


எறிந்த பின்,
மிச்சமிருக்கும் சாம்பல்,
நெருப்பை கேலி செய்வது போல...


காமத்தின் உச்சத்தில்,
தன் மச்சம் பார்த்தவர்களை,
மிச்சமின்றி உன்ன போகும்,
நோயை நினைத்து சிரிக்கிறாள்...


ஹைடெக் மனிதர்களை,
அடையாளம் காட்ட போகும்,
ஹட்ச். ஐ.வி நினைத்து களிக்கிறாள்...


உணர்ச்சி பெருக்கில்,
தன் உணர்வு நெரித்தவர்களை,
உருக்கபோகும் உண்மை நினைத்து,
உன்னதம் அடைகிறாள்...


விஞ்ஞானம் தோற்றுபோயிருப்பது,
பண்பாட்டை வென்றெடுக்கவென ...
விசும்பி கொண்டே சிரிக்கிறாள்,
சிரிப்பொலி வான் பிளந்தது....