Wednesday, July 1, 2009

எம்.எல்.ஏ வீடு..

சூரிய ஒளி உட்புகுந்து,
தூண் அமைக்கும் குடிசை...

காலை உணவு,
இரவே ஊறிக்கொண்டிருக்கும் நீரில்...


கட்டியிருக்கும் ஆடைக்கு மாற்று,
நிர்வாணம் தான்..


வரப்புகளை விட சற்று அகலமான,
மழைக்காலத்தில் மட்டுமே,
சமதளமான தார்சாலைகள்...


துணைக்கு வரும் நிலா வெளிச்சத்தில்,
நன்கு தெரியும் கல்லடிபட்ட,
தெருவிளக்கு....


இத்தனைக்கும் இடையே,
வெளிச்ச வெள்ளத்தில்,
நகரத்து நலன்களில்,
நலமாய் நிற்கிறது,
எங்கள் எம்.எல்.ஏ வீடு....

விரிசல்...

முதன் முறையாய்,
உனக்கும் எனக்குமான,
உணர்ச்சிகள்,
முட்டி மோதிக்கொண்டதில்,
உடைந்து சிதறுகின்றன,
ஒத்த அலைநீளங்களிலான,
நம் சிந்தனைகள்...


இரையை கொத்த,
எத்தனித்து,
அலகுடைதுக்கொண்ட,
பறவையாய்,
அலறுகிறது மனம்...


நம் அகநானூற்று,
புத்தகத்தில்,
புறநானூற்று பக்கத்தை,
புதைத்தவன்,
எவனென நானறியேன்...


இருப்பினும்,
ஊடலுக்குள்ளாக,
ஒளிந்திருக்கும்,
நம் காதலின் நம்பிக்கையில்,
நகருகிறது,
என் காலம்...

துரோக வில்...


தன்னினம்,
தடையின்றி தழைக்க,
விடையின்றி வாழும்,
விருட்சகங்கள்,
போராளி..

தன் மக்களின்,
உணர்வு இசைப்பதற்காய்,
இவன் கைகள்,
மீட்டிய வீணைகள்,
துப்பாக்கிகள்..

தன் மாணுடத்தின்,
உரிமை பிறப்பதர்க்காய்,
இவன் தேகம்,
வருடிய கண்ணிகள்,
வெடிகள்...

தோழமைகள்,
பகல் பார்பதற்காய்,
இருளில் இரட்சிக்கும்,
இவர்கள்,
இறந்துபடுவது,
நிச்சயம் இருக்காது,
தோட்டாக்களால்...

தன் இனம்,
தீகிற பொழுது,
மனம் நோகுவதாய்,
தினம் நடித்தவன்...

கொன்று குவித்து,
பாஸ்பரஸ் உண்ண,
களித்தவன்...

ஊழ்வினையை,
ஊதி தீர்த்தவன் என....

கர்ணனின் கதையாய்,
துளைத்திருக்ககூடும்,
துரோக வில்....

ஒரு உத்தம தாசி...


உயிர்கொல்லி நோய்,
உறுதி செய்ய பட்டபின்னும்,
சிரிக்கிறாள்,
ஒரு உத்தம தாசி...


எறிந்த பின்,
மிச்சமிருக்கும் சாம்பல்,
நெருப்பை கேலி செய்வது போல...


காமத்தின் உச்சத்தில்,
தன் மச்சம் பார்த்தவர்களை,
மிச்சமின்றி உன்ன போகும்,
நோயை நினைத்து சிரிக்கிறாள்...


ஹைடெக் மனிதர்களை,
அடையாளம் காட்ட போகும்,
ஹட்ச். ஐ.வி நினைத்து களிக்கிறாள்...


உணர்ச்சி பெருக்கில்,
தன் உணர்வு நெரித்தவர்களை,
உருக்கபோகும் உண்மை நினைத்து,
உன்னதம் அடைகிறாள்...


விஞ்ஞானம் தோற்றுபோயிருப்பது,
பண்பாட்டை வென்றெடுக்கவென ...
விசும்பி கொண்டே சிரிக்கிறாள்,
சிரிப்பொலி வான் பிளந்தது....