Thursday, December 24, 2009

கடவுளும் நாத்திகரென....


கற்பித்தல் கல்வியென,
போதிக்கிற கூடத்தில்,
கற்பழித்தல் கலவியென,
வரையறுத்தவனும்,
வன்மையாய் கண்டிக்கிறான்....

உன்னை பிரிந்தால்,
உயிர் போகுமென,
கருப்பையில்,
உயிர் விதைத்து விட்டு,
காதல் கலைத்தவனும்,
கண்கள் சிவக்கின்றான்...

நீலப்படத்தின்,
தரம் சரியில்லையென,
தயாரித்தவனின்,
தாயார் முதற்கொண்டு,
தகாத வார்த்தை சொன்னவனும்,
நெருப்பாய்  தகிக்கின்றான்...

பாசியாய்,
தேங்கிய காமத்தினை,
தாசியிடம்,
விலை பேசுகிற  காமுகனும்,
காரி உமிழ்கிறான்...

நடுப்பக்கத்தில்,
காமம் மடித்து விற்கும்,
நாளிதழ்களும்,
நாகரீகம் நழுவியதாய்,
நையாண்டி பேசுகிறது...

பிறர் மனை போதையில்,
பிணம் தின்று திரிந்தவனும்,
ஒழுக்கம் போனதாய்,
ஒப்பாரி வைக்கின்றான்...

இப்படியாய்,
கோயில் பிரகாரத்தில்,
கூடி களித்தவன்,
குற்றவாளியென,
கூட்டம் சேர்ந்து,
அர்ச்சகரை அர்ச்சிக்க..,

சிலை வடிவ சாமிக்கு,
இச்சிந்தனை பொருந்துமாவென,
கடவுளே எழுந்தருளி,
கேள்வி எழுப்பினால்,
அவரும் நாத்திகரென ...
அறிவித்திடுவர் மேன்மக்கள்...

குறிப்பு :  உரையாடல்  கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது...