Tuesday, February 16, 2010

கண்ணீரின் ஒற்றைத்துளி...


திரவியம் தேடி,
அரேபியாவில்,
தனிமை பூண்டிருந்த என்னை,
தந்தையின்,
உடல் நலம்குறித்து,
தகவல் தந்துவிட்டு,
விரைந்து வரச்சொன்னான்,
உடன் பிறந்தவன்....

ஆடையிநூடே,
சந்தேகத்தையும்,
உடுத்தி கொண்டு,
பயணப்படுகையில்,
படப்படக்கிறது,
சிந்தனை ....

அதன் அதிர்வலைகள்,
மரணம் பற்றி,
ஏனோ கேள்வியெழுப்பபி,
அது துக்கம் அனுசரிக்கிற,
சடங்கு அல்ல என்கிற,
கருத்துக்குள் தள்ளி,
பக்குவத்தின் ஒப்புதலுடன்,
பதிவு செய்கிறது,
என் ஆழ்மனதில்.....

இல்லம் நெருங்குகையில்,
போர்த்தியிருந்த கூட்டம்,
சங்கு ஒலி,
தென்னை ஓலையின் பின்னல்,
ஒப்பாரி,
புரிந்துகொள்வதற்கு,
போதுமானதாய் இருந்தது.....

இதயத்துடிப்பு,
சுவாசம்,
சிந்தனை,
இயக்கமென,
வாழ்தலுக்கான காரணிகளை,
தந்தையிடமிருந்து,
கையகப்படுத்தி,
கிடத்தியிருந்தது,
மரணம்....

என்னை கண்ட கணம்,
நெஞ்சறைந்து கொண்ட..
தாய் கிழவியும்,
குழுமியிருந்த கூட்டமும்,
எதிர்ப்பார்த்திருந்தனர்,
பெரும் அழுகையை,
என்னிடமிருந்து....

அழவிடாமல்,
அழுத்தி வைத்திருந்த,
பக்குவத்தை,
குற்ற உணர்வு,
குதறிக்கடித்த கணம்,
கண்ணீர் சுரப்பிகள்,
சிந்த தயாராயிருந்த,
ஒற்றைத்துளியை,
வரையறுப்பதற்கு,
வார்த்தை வசப்படவில்லை....

இக்கவிதை கீற்று இணையதளத்தில் பதிவேற்றம் ஆகியுள்ளது....

நன்றி கீற்று...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3610:2010-02-16-08-21-39&catid=2:poems&Itemid=88