Sunday, February 21, 2010

ஒரு சமூகம்...... என்னை கடந்திருந்தது.......


இலையுதிர்காலத்தில்,
மான் கொம்பாய்,
காட்சியளித்த விருட்சத்தின்,
கீழ் நின்று,
சருகை சேகரித்து,
பசை கொண்டு,
கிளை அமர்த்தலானேன்,
அவசியம் ஏதுமற்று....

அவ்வழி சென்ற ஒருவன்,
சிரித்துக்கொண்டே,
தலையடித்துச்சென்றான்...
சலனப்படாமல்,
தொடர்ந்திருந்தேன்....

மற்றொருவன்,
பைத்தியம் என்றபடி,
பயணமானான்,
முனைப்புடன்,
பாதிமுடித்திருந்தேன்...

பிறகொருவன் கண்டு,
சினிமாவிற்கான,
செயற்கை அமைப்பென,
யூகித்து நகர்ந்தான்,
முழுவதும் முடித்திருந்தேன்....

இப்போது வந்தவன்,
அறிவியல் ஆய்வெனவும்,
கடைசியாய் ஒருவன்,
கலையுணர்வென,
கண்சிமிட்டியதுடனும்,
முழுதாய் ஒரு சமூகம்,
என்னை கடந்திருந்தது........


இக்கவிதை திண்ணை  இணையத்தளத்தில் பதிவேற்றமாகியுள்ளது....
நன்றி திண்ணை...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310022010&format=html

Tuesday, February 16, 2010

கண்ணீரின் ஒற்றைத்துளி...


திரவியம் தேடி,
அரேபியாவில்,
தனிமை பூண்டிருந்த என்னை,
தந்தையின்,
உடல் நலம்குறித்து,
தகவல் தந்துவிட்டு,
விரைந்து வரச்சொன்னான்,
உடன் பிறந்தவன்....

ஆடையிநூடே,
சந்தேகத்தையும்,
உடுத்தி கொண்டு,
பயணப்படுகையில்,
படப்படக்கிறது,
சிந்தனை ....

அதன் அதிர்வலைகள்,
மரணம் பற்றி,
ஏனோ கேள்வியெழுப்பபி,
அது துக்கம் அனுசரிக்கிற,
சடங்கு அல்ல என்கிற,
கருத்துக்குள் தள்ளி,
பக்குவத்தின் ஒப்புதலுடன்,
பதிவு செய்கிறது,
என் ஆழ்மனதில்.....

இல்லம் நெருங்குகையில்,
போர்த்தியிருந்த கூட்டம்,
சங்கு ஒலி,
தென்னை ஓலையின் பின்னல்,
ஒப்பாரி,
புரிந்துகொள்வதற்கு,
போதுமானதாய் இருந்தது.....

இதயத்துடிப்பு,
சுவாசம்,
சிந்தனை,
இயக்கமென,
வாழ்தலுக்கான காரணிகளை,
தந்தையிடமிருந்து,
கையகப்படுத்தி,
கிடத்தியிருந்தது,
மரணம்....

என்னை கண்ட கணம்,
நெஞ்சறைந்து கொண்ட..
தாய் கிழவியும்,
குழுமியிருந்த கூட்டமும்,
எதிர்ப்பார்த்திருந்தனர்,
பெரும் அழுகையை,
என்னிடமிருந்து....

அழவிடாமல்,
அழுத்தி வைத்திருந்த,
பக்குவத்தை,
குற்ற உணர்வு,
குதறிக்கடித்த கணம்,
கண்ணீர் சுரப்பிகள்,
சிந்த தயாராயிருந்த,
ஒற்றைத்துளியை,
வரையறுப்பதற்கு,
வார்த்தை வசப்படவில்லை....

இக்கவிதை கீற்று இணையதளத்தில் பதிவேற்றம் ஆகியுள்ளது....

நன்றி கீற்று...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3610:2010-02-16-08-21-39&catid=2:poems&Itemid=88

Wednesday, February 10, 2010

வேகத்தடை...


நெடுநேரமாய்
சூரியனின் கிரணங்கள்
சறுக்கி விளையாடிய
நிழற்குடை ஒன்று
அந்தியில் வாசம் செய்கிற
கல்லூரிப் பெண்களினால்
தணிந்திருந்தது....

நிறைந்திருந்த அப்பெண்களின்
கேளிக்கையும்
சிரிப்பொலியும்
கொட்டிய அதிர்வலைகளில்
திடீரென முளைத்திருக்கக்கூடும்
தார்ச்சாலையின் மீதொரு
வேகத்தடை...

இக்கவிதை கீற்று இணையதளத்தில் பதிவேற்றம் ஆகியுள்ளது....
நன்றி கீற்று...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3396:2010-02-11-05-01-12&catid=2:poems&Itemid=88

Sunday, February 7, 2010

ஆயுதத்தின் கூர்முனை....
ஒவ்வொரு முறையும்,
உன்னிடம் வாதிட்டு,
தோற்றதின் படிமங்கள்,
ஆயத்தப்படுத்துகின்றன,
அடுத்தமுறை உன்னை வீழ்த்த...

இம்முறை வார்த்தையையும்,
வாதத்திற்கான காரணியையும்,
ஒன்று சேர்த்து கூர்தீட்டி,
ஆயுதமாய் திரித்து,
மறைத்தவாறு,
தோன்றுகிறேன் உன் முன்னே...

துவங்குகிறது வாதம்,
நீண்ட அவ்வார்த்தை யுத்தத்தில்,
ஆயுத பிரயோகத்திற்கான,
என் முறையில்,
சிரித்து வைகிறாய்,
சாதுர்யமாக...
மழுங்கி இருக்ககூடும்,
ஆயுதத்தின் கூர்முனை....

இக்கவிதை திண்ணை  இணையத்தளத்தில் பதிவேற்றமாகியுள்ளது....
நன்றி திண்ணை...
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31002065&format=html

Monday, February 1, 2010

காதலின் சுவடு

தானே சிரித்து,
தலை சொருகி,
பொதுவிடம் உணர்ந்து,
வெட்கம் உதிர்க்கிற பெண்,
விட்டுச்செல்கிற,
கால் தடத்தில்,
பதிந்திருக்க கூடும்,
காதலின் சுவடு...

இக்கவிதை கீற்று இணையத்தளத்தில் பதிவேற்றமாகியுள்ளது....
நன்றி கீற்று...
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2989:2010-02-01-05-49-11&catid=2:poems&Itemid=88