Sunday, February 21, 2010

ஒரு சமூகம்...... என்னை கடந்திருந்தது.......


இலையுதிர்காலத்தில்,
மான் கொம்பாய்,
காட்சியளித்த விருட்சத்தின்,
கீழ் நின்று,
சருகை சேகரித்து,
பசை கொண்டு,
கிளை அமர்த்தலானேன்,
அவசியம் ஏதுமற்று....

அவ்வழி சென்ற ஒருவன்,
சிரித்துக்கொண்டே,
தலையடித்துச்சென்றான்...
சலனப்படாமல்,
தொடர்ந்திருந்தேன்....

மற்றொருவன்,
பைத்தியம் என்றபடி,
பயணமானான்,
முனைப்புடன்,
பாதிமுடித்திருந்தேன்...

பிறகொருவன் கண்டு,
சினிமாவிற்கான,
செயற்கை அமைப்பென,
யூகித்து நகர்ந்தான்,
முழுவதும் முடித்திருந்தேன்....

இப்போது வந்தவன்,
அறிவியல் ஆய்வெனவும்,
கடைசியாய் ஒருவன்,
கலையுணர்வென,
கண்சிமிட்டியதுடனும்,
முழுதாய் ஒரு சமூகம்,
என்னை கடந்திருந்தது........


இக்கவிதை திண்ணை  இணையத்தளத்தில் பதிவேற்றமாகியுள்ளது....
நன்றி திண்ணை...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310022010&format=html