Thursday, July 9, 2009

விரிசல்-2


இரவின் இருள்,
சப்தங்களுக்கு திரையிட்டுவிட்டு,
ஆத்மார்த்தமான,
அமைதிக்கு,
ஆயத்தமாயிருந்தது...


யாதுமற்ற தனிமையில்,
இருள் சூழ்ந்திருப்பின்,
உறக்கம் ஊடுருவும்,
என்றவாறான,
நம்பிக்கை நலிந்த பின்னிரவில்,
உயிர்வதை செய்யும்,
நம் பிரிவின் வலியை,
இயற்கையோடு இறக்கிட,
பயணித்தேன்...


மஞ்சள் நிறத்தை,
கக்கிக்கொண்டிருந்த,
சோடியம் விளக்கொளியில்,
பச்சயம் தவிர்த்து,
பழுப்பு பூசியிருந்தன,
ஆலமரத்தின் தளிர்களும்...


இடைவெளி விட்டு,
விரைகின்ற வாகனங்களில்,
ஆகாயம் பறக்க,
ஆசைப்பட்டு,
தோல்வியை தழுவுகின்றன...
தார் சாலையின் மீதான,
மண்துகள்கள்...


பூட்டின் மீதான,
நம்பிக்கையின்மையோ,
இறைவனின் மீதான,
நம்பிக்கையோ,
மறித்து கொண்டிருந்தது,
கடைக்கு முன்னால்,
ஒரு கற்பூரம்...


விழி மறுதலித்த,
உறக்கத்தை,
மதுவிற்கு மனு செய்து,
வரவழைத்த,
குடிமகன்கள்,
புகார்களை,
பூமியின் செவியில்,
செப்பிக்கொண்டிருந்தனர்...


இந்நிகழ்வுகள்,
காட்சி பிழையன்று,
எனினும்,
பிழையையே எய்துகின்றன,
இக்காட்சிகள்...


உன்னோடான பிரிவில்,
ஏகாந்தம் பொழியும் இரவும்,
ஐம்பூதங்களால் அழுவதாய்,
அர்த்தபடுத்திக்கொள்கிறது,
ஆத்மா..


இரவை வீழ்த்தும் பொருட்டு,
கதிர் வாள் கொண்டு,
கிழக்கெழும் சூரியனும்,
என் அக இருளை,
அகற்ற முடியாமல்,
அறிவிப்பின்றி நகருகிறது,
மேற்கு நோக்கி...

2 comments:

Thanks for reading..